ஹொரணை – வகவத்த கொபவக்கவத்த பகுதியில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரோஹண ஓலுகலவின் ஆலோசனையின் பேரில் இந்த விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 14 படகுகள், மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹொரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/illegal-sapphire-excavation-raid-in-horana–25-people-arrested-1785242645

