தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கும் (NMRA) மருத்துவ விநியோகப் பிரிவிற்கும் (MSD) இடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குறைபாடு காரணமாக, புற்றுநோயாளிகளுக்குத் தேவையான 160,000 அத்தியாவசிய உயிர் காக்கும் தடுப்பூசிகள் மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் கிடங்குகளில் முடங்கியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த தடுப்பூசி அடங்கிய பெட்டியில் அனைத்துத் தகவல்களும், அதன் சிரிஞ்சின் முன்பகுதியில் சரியான லேபிள், உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் உற்பத்தியின் தரம் ஆகியவை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், லேபிளின் பின்பகுதியில் உள்ள நிர்வாகச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ விநியோகப் பிரிவு இந்த மருந்துகளைப் பொறுப்பேற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 900 ரூபாய் பெறுமதியான இந்தத் தடுப்பூசி தற்போது கறுப்புச் சந்தையில் 25,000 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையிலும் கூட அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கீமோதெரபி’ (Chemotherapy) சிகிச்சை பெறும் நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக மாதத்திற்கு சுமார் 25,000 நோயாளிகளுக்கு இந்தத் தடுப்பூசி மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இந்தத் தடுப்பூசித் தொகுதியை சிரிஞ்சின் பின்பகுதியில் லேபிள் செய்வதற்காக மீண்டும் திருப்பி அனுப்பினால், அத்தொகுதி இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலம் எடுக்கும்.
அதற்கமைய, எதிர்வரும் 3 மாதங்களுக்குள் சுமார் 75,000 புற்றுநோயாளிகள் கடுமையான உயிராபத்தை எதிர்நோக்குவர்.
இந்த நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் இரத்த நோயியல் நிபுணர்களை இணைத்து அவசரக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, இந்தத் தடுப்பூசித் தொகுதியை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது தேசிய மட்டத்திலான அத்தியாவசிய தேவையாகும் என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது

