2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் ஊடாக பல கட்டங்களாக சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும் சுமார் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்னர் சுமார் 17,000 ரூபாவாக இருந்த அரச சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் அளவிற்கு அதிகரிக்கும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.
சம்பளம் தொடர்பான அழுத்தங்களின்றி அரச ஊழியர்கள் தமது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவது திறமையான அரச சேவைக்கு அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தாங்கக்கூடிய அதிகபட்ச அளவிலேயே இந்த சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 2027ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் இலங்கை IMF திட்டத்திலிருந்து விலகி, அரச ஊழியர்களுக்கு இதைவிட அதிகமான நிவாரணங்களை வழங்கும் நிலையை அரசு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

