Courtesy: Sivaa Mayuri
இலங்கை எதிர்வரும் வாரங்களில் திவால் நிலையில் இருந்து வெளியேறும் எனவும் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இந்தியாவுடன் வலுவான பங்காளித்துவத்தை இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான அவசரத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில், இருதரப்பு திட்டங்களை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான நிகழ்ச்சி நிரல்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
மூன்று தசாப்தகால மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பிராந்தியத்திற்கு புதிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
கொழும்பில்(colombo) நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளிகள் சந்திப்பில் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை பெற்ற கடன்
இந்தியா, இலங்கைக்கு 3.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியதன் காரணமாகவே, இலங்கை தற்போது இரண்டு கடினமான ஆண்டுகளில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளது.
அவையனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். பங்களாதேஷ் கொடுத்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டது என்று ரணில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், இலங்கை, தமது உத்தியோகபூர்வ கடனாளிகளுடனும், சீனாவின் எக்ஸிம் வங்கியுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயாராகி வருகிறது
அடுத்த வாரம், புதன்கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன் அடுத்த வாரத்தில், நாங்கள் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதன்படி, அடுத்த வாரத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ, இலங்கை திவால் நிலையிலிருந்து வெளியே வந்து அடுத்த கட்டத்திற்குள் செல்லும் என்று ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை – இந்திய கூட்டுத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியுடன் தாம் விவாதித்துள்ளதாக ரணில் கூறியுள்ளார்.
இந்திய – இலங்கை கூட்டுத்திட்டத்தின் கீழ், எரிபொருள் குழாய் இணைப்பு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, தரைப்பாதை அமைப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, அமுல் பால் நிறுவனத்தின் திட்டங்கள், எரிவாயு விநியோகம், திருகோணலையில் பொருளாதார மையம், காற்றாலை மின்சாரம் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.