உக்ரைன் – ரஷ்ய போரில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து சென்ற 17 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக ரஷ்யா சென்ற இலங்கை தூதுக்குழுவின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இன்று (29) காலை நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
121 பேர் மாயம்
மேலும், போரில் ஈடுபட்ட 121 பேர் இதுவரை காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 8 அரச அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அண்மையில் ரஷ்யா சென்றிருந்தனர்.
இந்நிலையில், ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் குழுவினர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.