மனைவியுடனான பிரச்சினையால் தான் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள் எனவும் இதனால் மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் எனவும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் (Chamara Sampath) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (10.07.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மதுவரி சட்டங்களை திருத்துதல் மற்றும் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குதல் போன்ற செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
பாரிய பிரச்சினைகள்
அதேவேளை, மதுபானங்களின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பால் மதுவரி திணைக்களம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 50 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 60 இலட்சம் பேர் மது அருந்துவதாக கூறப்படுகின்றது. இதற்கு உடல், மன வலிகள் மற்றும் மனைவியுடனான பிரச்சினைகள் காரணாமாக இருக்கலாம்.
இந்நிலையில், குறைந்த விலையில் இருந்த அதிவிசேட மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
விலை குறைப்பு
மதுபான நுகர்வுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளார்கள். மதுபான விலை அதிகரிப்பால் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி ஐந்து கடற்றொழிலாளார்கள் உயிரிழந்துள்ளார்கள்.
ஆகவே, மதுபான விலைகளை குறைத்து மதுபானங்களை அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலுக்கமைய வரிகளை குறைக்க வேண்டிய அவசியமில்லை.
எமக்கான தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். ஆகவே, மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு இறுதியாக வலியுறுத்துகிறேன்” என்றார்.