கனடாவில் (Canada) சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மாணவர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் வாழ்வோரின் எண்ணிக்கையைக் கனடா அரசு கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் மீறி இவ்வாறு கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
இதேவேளை, கனடாவில் ஏற்பட்ட வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, அந்நாட்டில் அரசு சர்வதேச மாணவர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளையும் மீறி, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை விட, 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்வி அனுமதி எண்ணிக்கை
அதன் படி, 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கனடா வழங்கிய கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 165,805 ஆகும்.
அத்துடன், 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கனடா வழங்கிய கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையோ 187,510 என்பது குறிப்பிடத்தக்கது.