அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிகளை வழங்கி முடிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நிவாரணங்களை வழங்கி முடிக்குமாரு அவர் தெரிவித்துள்ளார்.
Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வெளிப்படைத்தன்மை
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளைச் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் எவரையும் கைவிடாத வகையில் தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
உதவித்தொகை
அதேநேரம், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான காணி அடையாளப்படுத்தல் மற்றும் புதிய வீட்டுத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன், அனர்த்தத்தின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

