தேசிய மக்கள் சக்தியினால் இலங்கையின் பிரபல இசைக்குழு ஒன்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னணி இசைக் குழுக்களில் ஒன்றான மேரியன்ஸ் இசைக்குழுவிற்கு இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் அச்சுறுத்தல்கள்
தேசிய மக்கள் சக்தியை விமர்சனம் செய்து பாடல் ஒன்று பாடியமை தொடர்பில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இசைக்குழு அதற்காக மன்னிப்பு கோரி மற்றுமொரு காணொளியை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இது ஓர் ஆரோக்கியமான நிலை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாகவும் இது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நகைச்சுவைக்காக இசைக்குழு ஒன்று வெளியிட்ட காணொளிக்கு அச்சுறுத்தல் விடுப்பது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் அனுரகுமார தரப்பினர் மட்டுமே எவரையும் விமர்சனம் செய்ய முடியும் என்ற நிலைமை ஆபத்தானது என மதுர விதானகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.