Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு குமுழமுனைச் சந்தியின் இன்றைய தோற்றம் பற்றி சமூக ஆர்வலர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் பரபரப்பாக இயங்கிய குமுழமுனைச் சந்தி முதன்மையான இடமாகவும் இருந்தது.
குமுழமுனைச் சந்திக்கு வருவோருக்கு ஈழப்போராட்ட உணர்வுகள் மேலோங்கி இருக்கும் வகையில் அன்று அந்தச் சூழல் பேணப்பட்டிருந்தது.ஆனாலும் இன்றைய நிலை அதற்கு எதிர்மாறாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல சமூகச் செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டு தன்முனைப்போடு ஈடுபட்டு, செயலாற்றி வரும் குமுழமுனைச் சமூகம்; குமுழமுனைச் சந்தியின் காட்சித்தோற்ற மாற்றத்திலும் கவனமெடுத்துச் செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
குமுழமுனைக்குச் செல்லும் பாதை
முல்லைத்தீவு நகரில் இருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக உள்ள ஒரு நகரம் குமுழமுனை ஆகும்.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இருந்து குமுழமுனைக்கு ஒரு பாதை செல்கின்றது.தண்ணீரூற்றில் உள்ள குமுழமுனைச் சந்தி என மக்களால் அழைக்கப்படும் இடத்தில் இருந்து குமுழமுனை ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
அவ்வாறே முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் உள்ள அளம்பில் சந்தி என மக்களால் அழைக்கப்படும் இடத்தில் இருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் குமுழமுனை அமைந்துள்ளது.
குமுழமுனைக்குச் செல்லும் இன்னும் இரு வழிகள் உள்ளன.தண்ணீரூற்று புளியங்குளம் வீதியில் தண்டுவான் கிராமத்தில் உள்ள; மக்களால் தண்ணிமுறிப்புச் சந்தி என அழைக்கப்படும் இடத்தில் இருந்து, தண்ணிமுறிப்புக் குளத்தினூடாக குமுழமுனையை சென்றடைய முடியும்.இந்த பாதை பதினாறு கிலோமீற்றர் நீளத்தினை உடையது.
அவ்வாறே, முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில், நாயாற்று பாலத்தில் கீழாக ஆரம்பித்து ஆண்டான் குளம் ஊடாக குமுழமுனையைச் சென்றடைய முடியும்.அப்பாதையின் நீளம் நான்கு கீலோமீற்றர்களாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் நித்தகைக்குளம் மற்றும் நெல் விளைச்சலில் பாரியளவு பங்கு வகிக்கும் தண்ணிமுறிப்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதான பாதைகள் குமுழமுனைக்கூடாக செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குருந்தூர மலைக்கான பிரதான பாதையும் குமுழமுனைக்குச் செல்லும் வழித்தடங்களின் ஊடாகவே அமைந்துள்ளன என்பதும் நோக்கத்தக்கது.
குமுழமுனைச் சந்தி
தண்ணீரூற்றில் இருந்து குமுழமுனைக்கு வரும் தணணீரூற்று – குமுழமுனை வீதியில் கொட்டுக் கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்குச் செல்லும் பாதை இணையும் இடமே குமுழமுனைச் சந்தியாக மக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இச்சந்தியில் இருந்து கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்திற்கும் அளம்பிலுக்குச் செல்லும் பாதையும் தண்ணீரூற்றுக்குச் செல்லும் பாதையும் அளம்பில் செல்லும் பாதையை இணைக்கும் குறுக்கு சிறு வீதியும் ஆரம்பிக்கின்ற நாற்சந்தியாக இருக்கின்றது.
குமுழமுனைச் சந்தியைச் சூழ பல வியாபார நிலையங்களும் குமுழமுனைச் சந்தையும் பொதுக் கட்டிடமும் பல.நோ.கூ.சங்க கட்டிடமும் பாடசாலையும் அமைந்துள்ளதோடு குமுழமுனை பிராந்திய வைத்தியசாலையும் இச் சந்திக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு முன்னாக குமுழமுனை மத்தி கிராமசேவகர் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
குமுழமுனையும் ஈழப்போராட்டமும்
முல்லைத்தீவில் உள்ள குமுழமுனை ஈழப்போராட்ட வரலாற்றோடு மிக நெருக்கமாக பின்னிப்பிணைந்த ஒரு பிரதேசமாகும்.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்திலும் சரி, இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்திருந்த போதும் சரி, அதற்கு பின்னரான போராட்ட காலத்திலும் சரி குமுழமுனைச் சந்தி மிக முக்கியமான ஒரு இடமாக இருந்து வந்ததுள்ளது.
போரியல் நிகழ்வுகளூடாக இராணுவ கேந்திர முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டிருக்காத போதும் உயிர்த்துடிப்போடு ஈழப் போராட்த்திற்கு உறுதுணையாக இருந்த இடம் குமுழமுனை என்றால் அது மிகையில்லை.
குமுழமுனையின் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கும் யாரொருவராலும இந்த நிதர்சன உண்மையை புரிந்துகொள்ள முடியும்.
மணலாற்றுக் காட்டுக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் இருந்த போதும் நித்தகைக்குளத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் முகாம்களுக்கான பிரதான வழங்கல் பாதையாகவும் பின்தள மக்கள் ஆதரவுள்ள இடங்களில் முதன்மையான இடமாகவும் குமுழமுனை இருந்துள்ளது.
நித்தகைக்குளத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து ஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராடட்டத் தலைமையை அழித்தொழிக்க முயன்ற இந்திய இராணுவத்திற்கும் கூட குமுழமுனை பயனுடையதாகவே இருந்துள்ளது.
விடுதலைப்போராட்டத்தின் தலைமை மணலாற்றுக்காட்டுக்குள் இருந்த வேளை வவுனியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள இடங்களுக்கான நுழைவாயிலாக குமுழமுனை இருந்துள்ளது.
ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் போராளிகளாக இருந்து போரடி; இன்றும் முன்னாள் போராளிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பலருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது, அவர்கள் விபரித்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு தெளிவாக வரமுடிகின்றது.
குமுழமுனைச் சந்தியின் அன்றைய தோற்றம்
குமுழமுனைச் சந்தியில் குமுழமுனை மகாவித்தியாலயத்திற்கு அருகில், பாதையின் ஓரமாக பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.அதன் கீழ் லெப்.கேணல் அன்பு(தாடி) என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியொருவரின் முழு உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு, சந்தியில் இருந்த; இன்றும் இருக்கின்ற வீதியோர மதில்களில் மாவீரர்களின் பெயர்கள் வர்ண நிறப்பூச்சுக்கள் கொண்டு எழுதப்பட்டிருக்கும்.
மாவீரர் நாள் போன்ற ஈழப்போராட்ட எழுச்சி நாட்களின் போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு இருந்ததோடு, பல தடவை வீதி வளைவுகள் கூட வைக்கப்பட்டிருக்கும் என முன்னாள் போராளிகள் பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்திருந்தனர்.
அப்போதெல்லாம், பாடசாலை வீதி மற்றும் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் வீதி என குமுழமுனைச்சந்தியின் வீதிகள் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும்.ஆனாலும் இப்போதெல்லாம் அப்படி இருப்பதை காணமுடியவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்
குமுழமுனைச் சந்தியின் இன்றைய காட்சித் தோற்றம் மனவருத்தம் தரக்கூடியதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்றைய காட்சித் தோற்றத்தில் இருந்த தூய்மையும் நேர்த்தியும் இன்றில்லை.
அன்றைய குமுழமுனைச் சந்தியில் இருந்து இன்றைய குமுழமுனைச் சந்தி பாரியளவிலான அபிவிருத்தியைக் கண்டுள்ளது.ஆனபோதும் நேர்த்தியான காட்சித் தோற்றத்தை கொடுப்பதில் அபிவிருத்தியடையவில்லை.
வீதிகளில் வீசப்படும் குப்பைகளால் வீதிகள் அழகிழப்பதோடு தங்களின் தூய்மையையும் அவை இழந்து நிற்கின்றன.
குமுழமுனைச் சந்தியில் இருந்து அளம்பில் செல்லும் பாதையில் சந்திக்கு அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவை தேங்கிக்கிடந்த ஒரு நிலை இருந்து வந்தது.
சிறு முயற்சியினால் இப்போது
(அவதானிக்கப்பட்ட காலப்பகுதியில்) குப்பைகள் அகற்றப்பட்டு “இவ்விடத்தில் குப்பைகள் போடவேண்டாம்’ என அறிவித்தல் வைக்கப்பட்டுள்ளது.இது இவ்வாறே தொடர்ந்து பேணப்படுமா? என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாதது.
குமுழமுனைச் சந்தியில் குப்பைகளைக் கொட்டுவது குமுழமுனைச் சந்தியில் வியாபார நிலையங்களை வைத்திருப்போரும் சந்தியில் கூடும் மக்களும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களன்றி வேறொருவர் வந்து குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்வதில்லை என வீதிகளில் வீசப்படும் குப்பைகள் தொடர்பில் கேட்ட போது குமுழமுனை முதுசமொருவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
வியாபார நிலையங்களின் முற்பகுதி தூய்மையாக பேணப்படுவதில் இன்னும் அதிக கவனம் எடுக்கப்பட வேண்டும்.
கிராமத்தின் சந்தியாக அமைவது மட்டுமல்லாமல் தண்ணிமுறிப்பு வயலுக்கு சென்று வரும் குமுழமுனை மக்கள் மற்றும் தண்ணிமுறிப்பில் நெற் செய்கையில் ஈடுபட்டுவரும் ஏனைய இடத்து மக்கள் என பலரும் இந்த குமுழமுனைச் சந்திக்கு வந்து அதனூடாகவே சென்று வருவதனை அவதானிக்கலாம்.
அப்படி இருக்கும் போது அதன் சுற்றுச் சூழலை அழகோடும் நேர்த்தியான காட்சித் தோற்றத்தோடு கூடிய தூய்மையான இடமாக ஏன் பேணிக்கொள்ள குமுழமுனைச் சமூகத்தினால் முடியவில்லை என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
தலைவெட்டி பிள்ளையார் வழிபாட்டிடம்
முல்லைத்தீவு குமுழமுனை என்றால் தலைவெட்டிப் பிள்ளையார் ஆலயத்தைக் கொண்ட இடம்.தலைவெட்டிப்பிள்ளையார் ஆலயம் குமுழமுனையின் அடையாள முத்திரை என்று புகழப்படும் ஒரு கிராமம் இதுவாகும்.
கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயத்தினையே தலைவெட்டிப் பிள்ளையார் ஆலயம் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
மூலஸ்தான மூர்த்தியாக வழிபடப்படும் பிள்ளையார் சிலையின் தலைப்பகுதி வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாலேயே இந்தப் பெயர் வழக்காயிற்று.
குமுழமுனைச் சந்தியில் இருந்து 500 மீற்றர் தொலைவில் தண்ணி முறிப்பு பக்கமாக செல்லும் போது இந்த ஆலயம் வரும்.
குமுழமுனைச் சந்தியில் தலைவெட்டிப் பிள்ளையார் ஆலயத்தை நினைவூட்டி வழிபாட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் தலைவெட்டப்பட்ட, சீமெந்தால் ஆக்கப்பட்ட பிள்ளையார் சிலையொன்று வைக்கப்பட்டு, வழிபடப்பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.
அந்த வழிபாட்டிடச் சூழலினை சூழ ஒழுங்கமைக்கப்பட்ட ஆலயக் கட்டுமானம் ஒன்றை செய்து கொண்டால், அது குமுழமுனைச் சந்தியின் அழகையும் நேர்த்தியையும் மேலும் மெருகூட்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரத்தியேக கட்டமைப்பு
வளம் நிறைந்த குமுழமுனை பிரதேசம் மூன்று கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, பொருளாதார பலம் பெற்ற மக்களையும் கொண்டுள்ள கிராமமாக இருந்து வருவதாக; ஓய்வுபெற்ற கிராமசேவகர் கிராமத்தின் பொருளாதார நிலைபற்றி குறிப்பிடும் ஒரு சந்தர்ப்பத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
வெளி இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு குமுழமுனையின் முகமாக விளங்கும் குமுழமுனைச் சந்தியின் அழகிய தோற்றம் மற்றும் தூய்மையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்பட அவ்வூர் சமூகம் முற்பட வேண்டும்.
குப்பைகளை கிரமமாக அகற்றி, வர்த்தக நிலையங்களிற்கு முன்னுள்ள இடங்களில் கூடியளவு தூய்மையையும் அழகையும் பேணிக்கொள்ள முயலல் வேண்டும்.
குமுழமுனைச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் எல்லா வீதிகளிலும் குறிப்பிட்டளவு தூரம் இரு மருங்கும் தூய்மையை பேணிக் கொள்ள ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதற்கூடாக தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க முற்பட்டால், நல்ல பல மாற்றங்களை அவதானிக்க முடியும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
[FOMM2JD