உக்ரைன், பல்கேரிய மற்றும் இந்தியாவிலிருந்து இணையக்குற்றவாளிகள் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்குள் பிரவேசித்து பெருமளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் வங்கி முறைமை வீழ்ச்சியடையக்கூடும் என குற்றப் புனாய்வுப் பிரிவின் இணைய ஊடுருவல் விசேட புலனாய்வுப் பிரிவு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று தெரிவித்துள்ளது.
இணைய மோசடிகள் காரணமாக இலங்கையின் வங்கி முறைமை மீதான மக்களின் நம்பிக்கை உடைக்கப்படக் கூடும் எனவும், விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணையம் ஊடாக பணமோசடி
சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் இணையம் ஊடாக நாட்டின் வங்கி முறைமை தொடர்பில் பூரண கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இணையம் ஊடாக பண மோசடிகளை செய்வதற்கு அவர்களுக்கு உதவிய நாட்டிலுள்ள சகல நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.