இனப்பிரச்சனை தீர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு சுயேட்சை
வேட்பாளர் ஆண்டனி எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைகுழு சார்பாக கோடாலிச் சின்னத்தில்
போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான குழுவினரது வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா
குருமன்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சலுகை அரசியல்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தல் காலங்களில் சலுகை அரசியலை பேசி மக்களிடம் வாக்கு கேட்டதை
கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.
இருப்பினும் நிலையான அபிவிருத்திகளை
கொண்ட மனித பௌதீக வளங்களை ஒன்றிணைத்து அபிவிருத்திகளை ஏற்படுத்தி சமூகத்தை
தன்னிறைவடைய செய்யவேண்டும், அத்துடன் சலுகை அரசியலை இல்லாமல் செய்வது எம்முடைய
முதலாவது பணியாக இருக்கிறது.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் இணைந்து பயணித்து மக்களின்
அபிவிருத்தியை முன்நோக்கி கொண்டு செல்வதும் எமது முக்கிய கொள்கையாக இருக்கிறது.
தமிழ்மக்களின் வளர்ச்சிக்கு ஏற்புடையதான வகையில் இயலுமான
சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்வாறு இணைந்து செயற்படமுடியும்.
13 வது திருத்தம்
ஆட்சியாளர்கள் ஒவ்வொரு கொள்கையினை வைத்திருப்பார்கள். 13 வது திருத்தத்தை
தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எமது கடமை அதிகாரப்பகிர்வை எங்களுக்கு
ஏற்றவாறாக அவர்களை ஏற்றுக்கொள்ளவைப்பதே ஆகும்.
மக்களுக்கு காணிப்பிரச்சனைகள் இருக்கிறது.
தொல்பொருள் திணைக்களத்தின்
பிரச்சனைகள் இருக்கிறது. எனவே அரசுடன் இணைந்து பயணிப்பதன் மூலம் அவற்றை
தற்காலிகமாக நிறுத்துவதற்கான வழிகளையாவது செய்யமுடியும் என
எதிர்பார்க்கின்றோம்.
தேர்தல் காலங்களிலும் சரி அதற்கு பின்னரும் சரி மது ஒழிப்பு என்ற விடயத்தில்
ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.
எனவே எமது வேட்பாளர்கள்
மக்களுக்கான பிரதிநிதிகளாக சேவைகளை செய்வதற்கு காத்திருக்கின்றனர்.
இனப்பிரச்சனை
இனப்பிரச்சனை தீரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாங்கள் நிரந்தரமான நிலையான
அபிவிருத்தியை கையில் எடுத்திருக்கின்றோம்.
இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு
ஒவ்வொரு பிரஜைகளும் சொந்தகாலில் நிற்க்கக்கூடிய ஆற்றலை ஏற்படுத்தினால்
இனப்பிரச்சனைக்கான தீர்வை மக்களே ஏற்படுத்துவார்கள்.
மக்களுக்கு அதிக தேவைப்பாடுகள் இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டும்
செய்யக்கூடிய வேலைகள் பல இருந்தது.
அந்த குறைபாடுகள் தொடர்பாக மக்கள் எம்மிடம்
தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
அந்த வேலைத்திட்டங்களை நிறைவடைய செய்வதற்கான
நடவடிக்கைகளை நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்” என்றார்.