இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2020க்குப் பிறகு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளின் அளவு 6 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 2024 இல் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களின் அளவு ஒக்டோபர் 2024 இறுதிக்குள் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கணிசமான அதிகரிப்பு
இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் 7.9 வீதம் கணிசமான அதிகரிப்பு என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில் 7.3 சதவீதம் அதிகரித்து 6.38 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
குறித்த தொகையானது, 2024 செப்டம்பரில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
தங்க கையிருப்பு
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 5.8 வீதத்தால் 42 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில்சீன மக்கள் வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்கும், இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமன் என்றும் கூறப்படுகிறது.