Courtesy: Sivaa Mayuri
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு,கொழும்பில் (Colombo) பாரிய அளவிலான இணைய நிதி மோசடி மோசடியைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தநிலையில், மோசடிக்கு தலைமை தாங்கிய இருவர் உட்பட மொத்தம் 59 பேர் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு பிரஜைகளை குறிவைத்து இதனை மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது 300 மில்லியன் ரூபாய்கள் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது
சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு
இந்த மோசடியின் மூலம், இலங்கையை தளமாகக் கொண்ட ‘வேவெடெக்’ என்ற நிறுவனம், கொரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து வணிக முதலீடுகள் என்ற போர்வையில் 300 மில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்வதாகக் கூறி பல சந்தர்ப்பங்களில் கொரிய நாட்டவரிடம் இருந்து சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாகவும், எனினும் பின்னர் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் தவிர்த்ததாகவும், கொரிய தூதுரகம் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 8ஆம் திகதியன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, 23 பெண்கள் உட்பட 57 இலங்கை நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் கர்ப்பிணிகள் என்றும், சந்தேகநபர்கள் பன்மொழி பேசுபவர்கள் என்றும், சிலர் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை பெற்றவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம்
கைது செய்யப்பட்டவர்கள், தாங்கள் வேலைகளுக்காக பணியமர்த்தப்பட்டதாகவும்,பணியமர்த்தப்படுவதற்கு முன்னர் ஜப்பானிய, கொரிய மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழி புலமைத் தேர்வுகள் அவசியமாக கருதப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
சோதனை நடத்தப்பட்ட கட்டிடத்துக்கு, மாத வாடகையாக 9 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பணியாளர்களில் சிலர் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள், பலர் 25 வயதிற்குட்பட்டவர்கள், அவர்கள் முதல் சம்பளத்தை கூட பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளரை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஏனைய சந்தேகநபர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.