ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அநுர (Anura Kumara) அரசு இன்று இவற்றை நிகாரிக்கின்ற போக்கைக் கொண்டிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் (NPP) மாகாணசபை தொடர்பாக அண்மையில்
வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும்
என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியினாலும் அவருடன்
இருக்கக்கூடிய ஏனைய கட்சி உறுப்பினர்களாலும் பிரசாரம் செய்யப்பட்டது.
ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள்
வேறுபல
உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மேற்கண்ட உறுதிமொழியானது
முக்கியத்துவமானதும் முதன்மையானதுமாகும்.
புதிதாக வந்திருக்க்கூடிய அநுர அரசாங்கமானது இனவாதம் மதவாதம் போன்றவற்றிற்கு
இந்த நாட்டில் இடமில்லை என்று கூறுகின்றது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில்
அவர்களுக்குக் கிடைத்த நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில்
இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற சாரப்படவும் பேசுகின்றனர்.
அநுர அரசாங்கமும் ஜேவிபியும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும்
பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர்.
இதன்காரணமாக
அன்றிலிருந்து இன்றுவரை மாறிமாறி வந்த அரசாங்கங்களின் தமிழர் விரோத
கொள்கைகளிலிருந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள இவற்றிற்கு எதிராக
குரல் கொடுக்க வேண்டிய நிலையும் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தம்மைத்
தற்காத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இனவாதம் ஆகாது.
மாறாக தமிழ்
மக்களது மொழியை, கல்வியை, கலாசாரத்தை, மத நம்பிக்கைகளை அழிக்க வேண்டுமென்றும்
சிங்கள குடியேற்றங்களினூடாக அவர்களின் இருப்பை இல்லாமல் செய்ய வேண்டுமென்றும்
நடைபெற்ற அனைத்துமே சிங்கள மேலாதிக்க இனவாதத் தன்மை கொண்டவை. இவை
அகற்றப்படவேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்தில்லை.
கடந்த ஏழு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக
மாகாணசபைக்கு உரித்தான அனைத்து அதிகாரங்களும் கொழும்பிலிருக்கின்ற
அரசாங்கத்தாலேயே கையாளப்படுகின்றது.
இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கமும்கூட
மாகாணசபை தேர்தல்களை விரைந்து நடாத்துவதற்கான எவ்வித ஆயத்த நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளாமல் 2025ஆம் வருட இறுதியிலோ அல்லது அதற்குப் பின்னராகவோ மாகாணசபைத்
தேர்தல்களை நடத்தலாம் என்று கூறுகிறது.
13ஆவது திருத்தம்
மறுபுறத்தில் புதிய அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக
அகற்றுவோம் இது தேவையற்ற ஒரு விடயம் என்ற முடிவை ஜனதா விமுக்தி பெரமுன
கட்சியின் செயலாளர் ரில்வின் டி சில்வா உறுதிபடக் கூறுகின்றார்.
தமிழ்
மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை முன்மொழிய மறுக்கும்
பிரதமரோ ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ பதின்மூன்றாவதை இல்லாமல்
செய்வோம் என்பதை தெளிவுபடக் கூறுகிறார்கள்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ்,
முஸ்லிம் என்ற இன, மத பேதங்கள் இல்லை என்றும் நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள்
என்றும் கூறுவதனூடாக தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் கூற
முற்படுகின்றார்கள்.
ஒரு விடயத்தை நாம் தெளிவுபடக் கூறவேண்டும். தமிழ் மக்களின் தேசிய
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் ஒரு பகுதியாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம்
ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் அன்றைய
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இலங்கை தமிழ் மக்களின் சார்பாகவும் இந்தியா
சார்பாகவும் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் கையெழுத்திட்டனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பதின்மூன்றாவது திருத்தச்
சட்டமும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும்கூட அப்பொழுதைய ஜனாதிபதி ஜே.ஆர்.
ஜெயவர்த்தன எல்லா மாகாணங்களுக்குமான ஒரு அதிகாரப் பரவலாக்கமாக இதனை
மாற்றினார். ஆனால் இந்த பதின்மூன்றாவது திருத்தம் போதாது என்பதை பின்னர் வந்த
சகல ஜனாதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.
ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு
ஒன்றை உருவாக்கி ஒரு புதிய தீர்வுத்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றைக்
கோரியிருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினை
அவருக்குப் பின்னர் வந்த சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற மேம்பட்ட தீர்வுத்திட்டம் ஒன்றை
உருவாக்கி அதனை நாடாளுமன்றம் வரை கொண்டுசென்றார்.
பின்னர் வந்த மகிந்த
ராஜபக்ச திஸ்ஸவிதாரண கமிஷன் என்ற ஒரு சர்வகட்சி குழுவை உருவாக்கி
அவர்களும் ஒரு தீர்வுத்திட்ட அறிக்கையைக் கையளித்திருந்தார்கள்.
இறுதியாக
நல்லாட்சி ஒன்றை உருவாக்குவதாகக் கூறிய மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியில்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு புதிய
அரசியல் சாசன முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இப்போதைய ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவும் முக்கிய பங்குதாரராக இருந்தார்.
இவ்வளவும் ஏன்
நடைபெற்றது என்றால் பதின்மூன்றாவது திருத்தத்தைவிட மேம்பட்ட அதிகாரங்கள் தமிழ்
மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்குழுக்களும்
பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
ஆனால், இன்று வந்திருக்கக்கூடிய இடதுசாரி மார்க்சிய லெனினிய அரசானது இவற்றை
நிகாரிக்கின்ற ஒரு போக்கைக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இங்கு நாம்
இன்னுமோர் விடயத்தை தெளிவுபடக் கூறிக்கொள்கிறோம்.
இலங்கை சுதந்திரம் அடைந்த
காலகட்டங்களில் வடக்கு-கிழக்கு மக்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது மகாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால்
பின்னர் அதனை முழுமையாகக் கைவிட்டது.
அதேபோல் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவராக இருந்த கொல்வின் ஆர் டி சில்வா
அவர்கள் சிங்களம் மாத்திரம் என்று ஒரு சட்டம் வந்தபொழுது இரண்டு மொழி ஒரு நாடு
ஒரு மொழி என்றால் இரண்டு நாடு. எனவே இலங்கை ஒரு நாடாக இருக்க வேண்டுமாக
இருந்தால் சிங்களம் தமிழ் இரண்டிற்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று
நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
இந்தியாவிற்கு எதிரான கொள்கை
ஆனால் 1972இல் புதிய அரசியல் சாசனத்தின்
பிதாமகனாக அவர் கடமையாற்றியபொழுது தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக
பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட டொனாமூர் அரசியல் யாப்பில் இடம்பெற்றிருந்த
29ஆவது சரத்தும் இவரால் இல்லாமல் ஆக்கப்பட்டது.
இறுதியாக தமிழ் மக்களுக்கு பிரிந்துபோவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமை இருக்கிறது
என்று கூறிய நவசமமாசக் கட்சியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார அவர்களும் தமிழ்
மக்களுக்கு எவ்வித அதிகாரங்களும் தேவையில்லை என்ற ஒரு நிலைப்பாட்டையே
எடுத்திருந்தார்.
ஆகவே இடதுசாரிகள் என்பவர்கள் எவ்வாறு தம்மை இனவாதிகளாக
மாற்றிக்கொண்டார்கள் என்பது வரலாற்றில் மிகத் தெளிவான விடயமாக இருக்கின்றது.
ஜேவிபி அல்லது ஜனதா விமுக்தி பெரமுன என்று சொல்லக்கூடிய இடதுசாரி கட்சியானது
அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிரான இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளையே
தன்வசம் கொண்டிருந்தது. அதனையே பிரசாரப்படுத்தியும் வந்தது.
1971ஆம் ஆண்டின்
கிளர்ச்சியின்போதும்சரி 1987, 88 கிளர்ச்சிகளின் போதும்சரி அவர்கள் தமிழர்
தரப்பிலிருந்து யாரையும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. தமிழர்களை எதிரிகளாகவே
பார்த்தார்கள்.
இந்தியாவையும் கூட ஒரு விஸ்தரிப்பு வாதம்கொண்ட ஒரு நாடாகவே
காட்டினார்கள். இந்தியாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதைக்கூட
எதிர்த்தார்கள்.
ஆகவே இடதுசாரிகள் என்று சொல்வதன் காரணமாக மாத்திரம் இவர்கள் சமத்துவத்தையும்
நீதியையும் தமிழர்களுக்கு அளித்துவிடுவார்கள் என்பது அர்த்தமற்ற ஒரு
பொய்ப்பிரசாரமாகும்.
தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்க்கும் என்று நம்பக்கூடிய தமிழ் புத்திஜீவிகள், கல்வியாளர்கள் என்று
சொல்லிக்கொள்பவர்கள் இந்த வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம் தமிழ் மக்களின் தேசிய
இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றதென்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வை
முன்வைக்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாகும்.
அந்தத் தீர்வு எட்டப்படும்வரையில் மாகாணசபைகளுக்கு உரித்தான பதின்மூன்றாவது
திருத்தம் என்பது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத் தேர்தல்களும்
மிக விரைவாக நடத்தப்பட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம்
மாகாணசபை நிர்வாகங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தம்
ஒன்று மட்டுமே தமிழ் மக்கள் கைவசம் இருக்கக்கூடிய ஒரேயொரு பாதுகாப்பு அரணாக
தற்பொழுது இருக்கின்றது.
டொனாமூர் அரசியல் யாப்பிலிருந்த 29ஆவது சரத்தை அழித்தொழித்ததுபோல மாகாணசபை
முறைமையையோ அல்லது அதற்கான அதிகாரங்களை வழங்குகின்ற பதின்மூன்றாவது
திருத்தத்தையோ இல்லாதொழிக்க நாங்கள் அனுமதிக்கக்கூடாது. முப்பத்தேழு வருடங்களாக இந்த மாகாணசபையால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும்
சிலர் கூறுகின்றார்கள்.
ஆனால் 1988ஆம் ஆண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட
போதும்கூட 2009ஆம் ஆண்டுவரை இந்த நாட்டில் ஒரு யுத்தம் நடைபெற்றது. ஆனால்
2009ஆம் ஆண்டிற்குப் பின் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்களும் மாகாணசபைத்
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமலும் அதனை ஒத்தி வைப்பதுடன் அதிகாரங்களை
நடைமுறைப்படுத்தாமலும் காலத்தை ஓட்டினார்களே தவிர மாகாணசபை முறைமையை
உயிர்த்துடிப்புடன் செயற்படுத்துவதற்கான எந்த அக்கறையையும் அவர்கள்
வெளிப்படுத்தவில்லை.
பதின்மூன்றாவது திருத்தத்தைப் பற்றிப் பேசினால் புனிதம் கெட்டுவிடும் தீட்டு
ஒட்டிக்கொள்ளும் என்ற கற்பனாவாத கதைகளைக் கைவிட்டு தமிழ் மக்கள் விரும்புகின்ற
ஒரு அரசியல் சாசனம் வரும்வரையில் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக
நிறைவேற்றப்படவேண்டும் என்பதை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அதற்காகக் குரல்கொடுக்க
முன்வரவேண்டும்.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/mohKYSBVhjg