தங்களது அரசாங்கம் கவிழ்ந்தது போல் தற்போதைய அரசாங்கத்தையும் கவிழ்க்க விரும்பவில்லை சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
முன்னாள் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபதவின் இல்லத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், வணிக சமூகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறியதால் தான் பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பிரச்சினை
எனவே, இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஒரு நாட்டை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மதிக்க வேண்டும் என்றும், அதிகார ஆணவம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியதோடு, மக்களின் தேவைகளைக் கேட்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தோல்வியுற்ற நாட்டை விட வளரும் நாட்டை ஆள விரும்புவதாக நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.