ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சேகரித்த அரிசியைக் கூட அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) நிர்ணய விலைக்கு விநியோகிக்க முடியாமல் உள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய (Saman Rathnapriya) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (11) ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ”அரிசி ஆலை உரிமையாளர்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு விடுவிக்காமலிருந்ததால் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் அரிசி விலையும் ஒரு கிலோ 260 ரூபா வரை அதிகரித்தது.
அரிசி விலை அதிகரிப்பு
இதனை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதி அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வதாக தெரிவித்து, மேசையில் தட்டி, ஒரு கிலோவுக்கு 10 ரூபா அதிகரித்துள்ளார்.
ஜனாதிபதி இதன் மூலம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் அரிசியை வெளியில் கொண்டுவர முடியாமல் அவர்களுக்கு கிலாேவுக்கு 10 ரூபா அதிகரித்து மண்டியிட்டுள்ளார்.
அத்துடன் அரிசி இறக்குமதி செய்வதாக இருந்தால் அரசாங்கம் ஒன்று எதற்கு என கேட்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த 70 ஆயிரம் கிலோ அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.
ஆனால் இறக்குமதி செய்யும் அரிசியை அரசாங்கம் எத்தனை ரூபாவுக்கு இறக்குமதி செய்கிறது? மக்களுக்கு எத்தனை ரூபாவுக்கு வழங்கப்போகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி
இந்தியாவிலிருந்து சுவர்ன அரிசியை இறக்குமதி செய்யப்போவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் இந்த அரிசி ஒரு கிலாே 30 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் இறக்குமதி வரிகள் அடங்கலாக எமது நாட்டில் குறித்த அரிசி கிலாே ஒன்று 110 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால் அரசாங்கம் தற்போது அரிசிக்கு நிர்ணயித்துள்ள விலையின் பிரகாரம், ஒரு கிலாே 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டால் அரசாங்கத்துக்கு ஒரு கிலோவுக்கு 120 ரூபா இலாபம் கிடைக்கிறது.
அதேநேரம் அரிசி இறக்குமதிக்கு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளதால் அவர்களுக்கும் இந்த இலாபம் கிடைக்கும். அதனால் அரசாங்கம் இறக்குமதி செய்யும் அரிசிக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உர நிவாரணம்
மேலும் 2023இல் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடி நிலையில் விவசாயிகளுக்கு உரம் நிவாரணம் வழங்கி இரண்டு போகத்தின் மூலம் 58 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி அறுவடை செய்து சேகரித்து வைத்திருந்தார்.
ஆனால் எமது நாட்டில் வருடத்துக்குத் தேவையாக இருப்பது 24 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியாகும்.
அப்படியானால் எஞ்சிய அரிசி தொகை அரிசி ஆலை உரிமையாளர்களிடமே இருக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க சேகரித்த அரிசியைக் கூட அநுரகுமார திசாநாயக்கவுக்கு நிர்ணய விலைக்கு விநியோகிக்க முடியாமல், அரிசி ஆலை உரிமையாளர்களுக்குக் கிலோவுக்கு 10 ரூபா அதிகரித்து வழங்கி இருக்கிறார்.
அத்துடன் அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பும் வியாபாரிகளுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது“ என தெரிவித்தார்.