செயலிழந்துக் கொண்டு செல்லும் கூட்டுறவு துறையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்(Ilankumaran) தெரிவித்துள்ளார்.
சங்கானை பல் நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விலை நிர்ணயம்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விலை நிர்ணயம் எல்லை மீறி, தனியார் கைகளில் செல்கின்றது.
இதுவரை இருந்த அரசியல்வாதிகள் அதனை தனியார் என்று கூறினார்கள்.
ஆனால் நாங்கள் அதனை வியாபார மாஃபியா என்றுதான் கூற வேண்டும்.
அதனால் தான் இந்த கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துள்ளன.
கூட்டுறவு சங்கங்கள் பலமாக இருந்தால், விலை நிர்ணயம் என்பது கூட்டுறவு சங்கத்தால் தான் தீர்மானிக்கப்படும் என்று திடமான நம்பிக்கை எமது அரசாங்கத்துக்கு உண்டு.
விலைகள் அதிகரிக்கும் போதும், பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படும்போதும் கூட்டுறவு சங்கங்கள் பலமாக இருந்தால் அனைத்து சேவைகளும் சிறப்பாக அமையும். சங்கானையில் உள்ள 35 கிளைகளில் இன்று 8 தான் இயங்குகின்றன.
அரசியல் மாஃபியா
ஏனெனில் மக்கள் அருகில் உள்ள கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள்.
வியாபாரம் என்பது அரசியல் மாஃபியாவிடம் சிக்கி, வியாபாரம் அரசியல் பின்னூட்டலில் நடைபெறுகிறது. அரசியல்வாதிகள் மாறியுள்ளார்கள். ஆனால் அந்த சிஸ்டம்(முறைமை) மாறவில்லை. இதுதான் நியதி.
ஆனால், அரசியல்வாதிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் எங்களது பெயரை பாவித்தோ செல்வாக்கை பயன்படுத்த முடியாது. ஏனெனில் நாங்கள் கட்டமைப்புக்கு ஊடாக இயங்க ஆசைப்படுகிறோம்” என்றார்.