கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதம் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் உள்ள இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்திலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால், ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு, துறைமுக தாமதக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் பணியாளர் தேவைகள் காரணமாக, ஒரு கொள்கலனுக்கு ரூ.100,000 க்கும் அதிகமான செலவுகளைச் சந்திப்பதாகவும், சிலவற்றில் ரூ.300,000 வரை செலவுகளைச் சந்திப்பதாகவும் முக்கிய இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தாமதமாகும் கொள்கலன்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில், கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதம் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இறக்குமதியாளர்கள் கூடுதல் செலவுகளை நுகர்வோருக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த நிதிச் சுமை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள இறக்குமதியாளர்கள், கொழும்பு துறைமுகத்தின் திறமையின்மை காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.