ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள்
நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழில்(Jaffna) இன்று(31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமைத்துவம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய
மாற்றம் நடைபெறும்.
இந்தப் பகுதி மக்கள் அவர் மீது
அதற்காக நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஊழலற்ற ஆட்சி மக்களின்
எதிர்பார்ப்பாக இருக்கின்ற நிலையில் அதை ஜனாதிபதி வழங்குவார் என
நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்
திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கவனம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த காலங்களில்
முன்னெடுக்கப்பட்டு அரைகுறை நிலையிலுள்ள வீடுகளுக்காக நிதி ஒதுக்கீடு தேவை.
அதேபோல யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த
காலங்களில் முன்னெடுக்கப்பட்ட புகையிரத சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும்
ஒரேயிடத்திலிருந்து நெடுந்தூர சேவையை இணைந்த நேர அட்டவணையின் கீழ்
ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், இலங்கை
போக்குவரத்துச் சபையினர் அதற்கு ஒத்துழைக்கப் பின்னடிக்கின்றனர் என்பதையும்
ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம்
சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்
சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

