மட்டக்களப்பு – மண்டூர் முருகன் ஆலயத்தில் 20,000 ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயது பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை நேற்று (31) இரவு வெல்லாவெளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், வரலாற்றுப் புகழ்பெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் வேளையில், ஆலயத்தில் தரிசனத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கைப்பை திருடப்பட்டது.
திருடிய பெண்ணை கைது
இது தொடர்பாக காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.றஜிக்காந்தன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆலயப் பகுதியில் திருடிய பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பணப்பையும், அதிலிருந்த 20,000 ரூபாவும் மீட்கப்பட்டன. அவரிடமிருந்து கூடுதலாக 65,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

