இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,அர்ஜுன் மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்“னிலையாகுமாறு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்காத அர்ஜுன் மகேந்திரன்
எனினும், அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்ற உத்தரவுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை, அதன்படி, அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அடுத்த கட்டமாக, சர்வதேச காவல்துறை பிடியாணையை பிறப்பிக்கத் தேவையான அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் துறை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரங்க திசாநாயக்க மீதான பழியை துடைக்க நடவடிக்கை
அர்ஜுன் மகேந்திரனை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம். ரங்க திசாநாயக்க மீது சில தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த சட்ட நடவடிக்கை மிகவும் முக்கியமானது.

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

