அரசியல் பேதங்களை கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்
என ஜனாதிபதி நினைப்பதாகவும், அதனை எல்லோரும் உணர்ந்து ஒரே கோட்டில் பயணம்
செய்வதன் மூலமே நாட்டையும் மக்களையும் மீட்க முடியும் எனவும் பாராளுமன்ற
உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
போதே றஜீவன் எம்.பி இதனை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற வெள்ள அனர்த்தம்
சம்பந்தமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பல்வேறு
முறைப்பாடுகள் எமக்கு கிடைத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
யாழ் மாவட்டம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பொதுமக்கள்
பாதிக்கப்பட்டதுடன் சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

சில இடங்களில் பிரதேச
செயலக மட்டத்தில் தங்களுடைய சேதம் தொடர்பான பதிவுகள் முறையாக பதியப்படவில்லை,
கண்காணிக்கப்படவில்லை என்கிற முறைப்பாடுகள் வருகின்றன.
அது சம்பந்தமாக மாவட்ட
செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
கிராம மட்டத்திலே கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த
சேதங்களை கள ஆய்வு செய்து சரியான தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட
வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்கள்
தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு வரக்கூடாது என ஜனாதிபதி
எமக்கு தெரிவித்துள்ளார்.
யாராவது மக்கள் முறைப்பாடு செய்தால் அதிகாரிகள் அவர்களுடன் முரண்படாது அது
தொடர்பில் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்யும்போது அவர்களுடன்
அரசு அதிகாரிகள் முரண்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றது. அது தொடர்பாக
நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
அரசாங்கம் சரியான நிவாரணத்தை அறிவித்திருக்கிறது. அவர்கள்
மனிதாபிமானமாக செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செல்ல அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும்.
கடற்றொழிலாளர்கள்
கடற்றொழிலாளர்களுக்கு வானிலை
எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக பல நாட்களாக அவர்கள் தொழிலில்
ஈடுபடவில்லை. நாளாந்தம் உழைப்பவர்கள் இந்த அனர்த்தத்தால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். தின கூலிகளுக்கு செல்வோரும் இந்த மழை காரணமாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதி மற்றும்
பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று அவர்களுக்கான ஒரு தீர்வை
கட்டாயம் நாம் பெற்றுக் கொடுப்போம்.

எழுபது நாடுகளுக்கு மேல் நேரடியாக தொடர்புகொண்டு உதவி பொருட்களை வழங்கி
வருகின்றன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள்
அரசாங்கத்துக்கு நேரடியாக உதவி செய்கின்றார்கள்.
இந்த இடத்தில் சுனாமி வந்த
பொழுது ஏற்பட்ட அழிவுகளை விட மூன்று மடங்கு அழிவுகள் தற்போது ஏற்பட்டதாக
கணிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

