டித்வா சூறாவளியைத் தொடர்ந்து, சிறுவர்கள் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான சில முயற்சிகள் அதிகரித்து வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரிடர்களால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்துள்ளதாகவும் அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான சரியான எண்ணிக்கையை ஓரிரு நாட்களில் வெளியிட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சிறுவர்களின் படங்களை சமுக ஊடகங்களில் பகிரவேண்டாம்
“சிறுவர்கள் கடத்தல் மற்றும் சுரண்டல் முயற்சிகளை நாங்கள் காண்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதுபோன்ற முயற்சிகள் குறித்து காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால், தயவுசெய்து 1929 சிறுவர் உதவி இலக்கத்திற்கு (Child Helpline Service) தெரியப்படுத்தவும் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி/சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த சிறுவர்கள்
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவிக்கையில், பேரழிவுகளில் 87 சிறுவர்கள் தங்கள் பெற்றோரை – இருவரையும் அல்லது ஒருவரை – இழந்துள்ளதாகவும், தற்போது பொருத்தமான தரவுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


