உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும், அந்த விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டில் நிலவும் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் தெளிவுபடுத்தினார்.
தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் என்பதால், அந்த விலைகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு சாத்தியமில்லை. இருப்பினும், அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் நுகர்வு நிறைவடைந்த பின்னர், விலை குறித்து ஒரு முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எமக்கு எதிர்காலத்தில் வரவிருப்பது கடந்த மாதங்களில் கொள்வனவு செய்தவையாகும். குறைந்த விலையிலான எரிபொருளை எதிர்காலத்திலேயே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு சில கால தாமதம் ஏற்படும். ஆனால் விலை குறையும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கமைய, தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகையை நீக்காமல் இதே விலையில் பேணுவதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

