அண்மையில் ஸ்பா (Spa) சிகிச்சை நிலைய பெண் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டபோது, பொலிஸ் நிலையத்தினுள் வைத்து அவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதாகவும், அவர்களின் அடையாளங்கள் வெளிப்படும் வகையில் அவை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட சங்கம் மற்றும் இலங்கை ஸ்பா சங்கம் ஆகியன இணைந்து இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பொலிஸாரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சர்வதேச மனித உரிமைகள் சட்ட சங்கத்தின் சட்டத்தரணி சுசந்த குணவர்தன, அண்மையில் பொலிஸாரால் பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களின் அடையாளங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் சட்டத்தின் முன்னிலையில் சந்தேக நபர்கள் மட்டுமே, இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அவமானம் காரணமாக அந்தப் பெண்கள் தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கான கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் இந்த சட்டத்தை தெளிவாக மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதுடன், இது குறித்து பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஸ்பா நிலையங்களில் பணிபுரியும் பெண்களை கைது செய்து, அவர்களை விபச்சாரிகள் என சமூகத்தில் பிரசித்திப்படுத்தியுள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
இதனால் அந்தப் பெண்களால் தற்போது தமது வீடுகளுக்குக் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்பா தொழில் தடை செய்யப்படவில்லை. எனினும் அனைத்து ஸ்பா நிலையங்களையும் விபச்சார விடுதிகள் என முத்திரை குத்த சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தத் தொழிலை முறையாக நடத்தும் அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி செலுத்தி வருவதாகவும் இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க மேலும் தெரிவித்தார்.


