லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ‘ஜப்னா கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் உட்பட இரண்டு இந்தியர்கள் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை விளையாட்டு ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
காணொளி ஆதாரங்கள்
நான்கு எல்பிஎல் போட்டிகளின் முடிவுகளை மாற்றி அமைப்பதற்காக சந்தேக நபர்கள் வீரர்களுக்குப் பணம் வழங்கியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் காணொளி ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பானுக ராஜபக்ச, துனித் வெல்லலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட பல வீரர்களை, போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுகளுடன் சந்தேக நபர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது.
சாட்சியமும் இல்லை
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

“முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை.
இவர்கள் பெரும் தொகைப் பணத்துடன் இலங்கைக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவே ஆகும். இந்தச் சந்தேகநபர்கள் இளைஞர்கள் ஆவர் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
விபரங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கினால் விசாரணைகளுக்குத் தடங்கல் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Source: https://ibctamil.com/article/jaffna-kings-co-owner-another-indiansl-remanded-1784354780

