உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும்.
தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. இன்னும் குறைந்தபட்சம் 5 பேராவது இந்த வரிசையில் நிற்கிறார்கள். இவர்களுக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும், இத்தாக்குதலைத் திட்டமிட்டவர்கள், நிதியுதவி செய்தவர்கள் மற்றும் இதன் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இத்தாக்குதலால் இரு பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு வங்கியை இழந்து அரசியல் ரீதியாகத் தங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் இத்தாக்குதலுக்கு ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புடைய வேட்பாளர் ஒருவர் நிதியுதவி செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பினும், தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் இதன் பின்னணியில் இருந்து பயனடைந்தவர்கள் மீது ஏன் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காகவே பொலிஸ் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதே தவிர, தாக்குதலை நடத்தியவர்கள் இன்னும் முழுமையாகத் தண்டிக்கப்படவில்லை என்றார்.

