நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதாவது நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த அதிரடித் தீர்மானமானது, நாட்டில் நலிவடைந்துள்ள நீதித்துறை கட்டமைப்பை விரைவுபடுத்துவதோடு, நீதிக்காக நீண்டகாலம் காத்திருக்கும் மக்களுக்கு மிக விரைவான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/attorney-general-approves-bill-to-extend-judges-retirement-age-1785680675

