மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை முகாமை செய்துவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிசார், கடற்படை, பிரதேச செயலகம், சுற்றாடல் பிரிவு, உள்ளிட்ட பல திணைக்களைங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மண்முனை தென் எருவில் பறறு பிரதே சபையினால் நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகள் இதுவரைகாலமும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதானல் அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவற்றைத் தடுக்கும் முகமாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்காக வேண்டி இதன்போது கலந்து கொண்டிருந்த திணைக்கள அதிகாரிகள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
அதற்கிணங்க அனைத்து திரணைக்கள அதிகாரிகளும் தற்போது கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அவற்றை முகாமை செய்வது தொடர்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டு அதற்குரிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச சபைக்கு வழங்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

