ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘பொக்ஹோ சமன்’ என்பவரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 19ஆம் திகதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்து மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ‘பொக்ஹோ சமன்’ என அழைக்கப்படும் நபரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உடந்தையாக செயற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (23) வலஸ்முல்ல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொலைக்கு உடந்தையாக செயற்பட்டதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரை தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
24 வயதுடைய குறித்த சந்தேகநபர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

