Courtesy: தீபச்செல்வன்
ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது.
எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது.
இந்த நிலையில் இந்த நாள் (16.10.2024) என்பது ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் ஜேவிபியால் ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது.
தீர்வு வழங்கும் எண்ணமில்லையா?
வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமற்றது என்ற கருத்தை மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. தமிழ் தலைவர்கள் தமக்கான அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவே 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் குறித்துப் பேசுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்றும் அவர்களுக்கு விவசாயத்திற்கு நீரும் சந்தைப்படுத்தலும் கல்வியும் மாத்திரம் வழங்கினால் போதும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பல சிங்கள தலைவர்களே தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி வழங்க வேண்டும் என்பதையும் அதிகாரப் பகிர்வு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அவசியம் என்பதையும் ஏற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2009இற்குப் பிறகு தமிழ் தேசத்திற்கு வந்த ஜேவிபி தமிழ் மக்களுக்கென எந்தத் தீர்வும் முன்வைக்கத் தேவையில்லை என்றும் தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் அவர்களுக்கு தனியான பிரச்சினைகள் இல்லை என்றும் கூறி வந்தது.
இந்த நிலையில் அநுர குமாரவின் மூளையாக செயற்படும் ரில்வின் சில்வா போன்றவர்கள் இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஜேவிபி காலம் காலமாக கொண்டுள்ள கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜேவிபி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை மாற்றிக் கொண்டாலும் அதன் உள்ளடக்கமான இனவாத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் மிகக் கவனமாக அவதானிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு வடக்கில் அநுர மீது கண்மூடித்தனமான – கடந்தகால பார்வையற்ற – அறிவற்ற ஆதரவு கொண்டவர்களே இதில் விழித்துக் கொள்ள வேண்டும்.
இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட உரிமை மறுப்பு மற்றும் பேரினவாத இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனித் தமிழ் ஈழம் வேண்டி ஈழத் தமிழ் இளைஞர்கள் போராடிய நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது.
இலங்கை அரசுடன் பேச்சு நடாத்தி இந்தியாவின் தலையீடாகவும் தீர்வாகவும் முன்வைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாண அலகாக ஆக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் 1988ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. 13ஆவது திருத்தம் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் அதனை தாண்டிய சமவுரிமை ஆட்சி வழங்க வேண்டும் என்றும் அன்று வலியுறுத்திய தமிழர் தரப்பு அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது.
எனினும் சில தரப்புக்கள் மாத்திரம் தேர்தலில் போட்டியிட்டன. அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார். அதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பின்னாளில் அவர் துறந்திருந்தார்.
வடக்கு கிழக்கை பிரித்த நாள்?
இதேபோன்றதொரு நாளில் தான் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் நீதிமன்றத் தீர்ப்பினால் பிரிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலிய மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைக்கப்பட்ட நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையின் ஆகக் குறைந்த ஒரு சிறப்பாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் கனவாக இருந்தது.
அதனை மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற ஜேவிபி நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாகப் பிரித்துச் சாதித்தது.
2006ஆம் ஆண்டில் (2006.10.16) வடக்கு கிழக்கை பிரித்த அதேவேளை அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்றும் சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரைத் தொடங்கி விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்றும் ஜேவிபி அன்றைய மகிந்த அரசுக்கு மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி ஆதரவை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் சந்திரிகா அரசுக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியதுடன் பின்னர் மகிந்தவுக்கு போருக்கான ஆதரவை வழங்கியது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு திரட்டியவர்கள் என்ற வகையில் தமக்கே போர் வெற்றி சொந்தம் என்றும் ஜேவிபி முன்னைய காலத்தில் அரசுடன் முரண்பட்டதும் பெருமைப்பட்டதும் கூட வரலாறு ஆகும்.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான பல அனுபவங்களை ஜேவிபி ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்மைய காலத்தில் அநுர குமார திசாநாயக்க தேர்தலின்போது போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பேன் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்களின் கண்ணீருக்குப் பதில் கூறுவேன் என்றும் சொல்லியிருந்தபோதும் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதன் ஊடாகவும் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்பதன் ஊடாகவும் தனது மெய்யான பேரினவாத முகத்தைக் காட்டுகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
17 October, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>