முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் விகாரைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குருந்தூர் விகாரை வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், பக்தர்கள், தொல்பொருள் தளம் மற்றும் அங்குள்ள தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்லியல் பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அங்கு பணியாற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குருந்தூர் விகாரையின் பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக மீள பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: https://samugammedia.com/police-protection-again-for-mullaitivu-kurundhur-vicarage-1788154235

