அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால் நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்து போன்று விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்த கருத்துக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) பதிலளித்துள்ளது.
இதன்படி 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி சீரழித்த அனுபவசாலிகளை மக்கள் இனி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே வாக்களிப்பார்கள்
பதுளையில்(badulla) நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne), மக்கள் நட்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் என்றார்.
“அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் சொன்னதைக் கேட்டேன். சாரதியின் தவறினால் ஏற்பட்ட விபத்தைப் போன்று அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகாவிட்டால் நாடு கொத்தலாவல பல்கலைக்கழக பேருந்தைப் போல் நொறுங்கும் என தெரிவித்துள்ளார்.
76 வருடங்கள் நாட்டை சீரழித்தவர்கள்
ஆம் அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது. 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி, நாட்டையே நொறுக்கிய அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் அதிகாரத்தை கொடுக்க மாட்டார்கள்,” என்றார்.
கொழும்பில் உள்ள ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் வார இறுதியில் நடைபெற்ற இளைஞர் மாநாடு ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை மக்கள் நாடாளுமன்றம் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என தெரிவித்திருந்தார்.