எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னம் மற்றும் ஜனசெத பெரமுனவின் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் உள்ளிட்ட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அச்சுறுத்தலாக அமையாத சில வேட்பாளர்களுக்கு மாத்திரமே போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களை பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை சிறையில் அடைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2050ஆம் ஆண்டு வரையில் வேறு எந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வராது என ஆளும் தரப்பினர் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கம் சில எதிர்க்கட்சியினரை மாத்திரம் கைது செய்து வருவதை பார்த்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, தற்போது மௌனம் காக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

