மன்னார் (Mannar) மாவட்டத்தில் நேற்று (24) காலை வரை பெய்த கடும் மழையினால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 நபர்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள்
வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்
இந்த நிலையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று இடைத்தங்கல் முகாம்களில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய
பொது மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 53 நபர்களும், எமில் நகர்
பகுதியில் அன்னை தெரேசா பாடசாலையில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 158
நபர்களும், ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் கனமழை காரணமாக மொத்தமாக
1608 குடும்பங்கனைச் சேர்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
வெள்ள அனர்த்தம்
அத்துடன், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள்
பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமையால் வெள்ள
அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்ற கிராமங்களை சேர்ந்த
மக்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளையோ அல்லது நலன்புரி முகாம்களையோ அவசர
தேவைக்காக அடையாளப்படுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மக்களுக்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Source: https://ibctamil.com/article/heavy-rain-in-mannar-7023-persons-affected-1729839217

