அனுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியதாகக் கூறி, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (15) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ஷ குமார,
2011ஆம் ஆண்டு அரசிதழ் அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை பகிரங்க மேடையில் தான் ஒரு “புலி” எனக் கூறி ஊக்குவித்தும் பிரசாரம் செய்தும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறான கருத்துகளைப் பகிரங்கமாக வெளியிடுவது நாட்டின் அரசியலமைப்பையும் சட்டத்தையும் மீறும் செயல் என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்குள்ளும் இதுபோன்ற கருத்துகளை அர்ச்சுனா முன்னர் வெளியிட்டு வந்ததாகவும், அவை நாடாளுமன்ற வரப்பிரசாதங்களின் பின்னணியிலேயே முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இம்முறை மக்கள் பெருமளவில் கூடியிருந்த பகிரங்க மேடையில் ஏறி தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டுள்ளதாக நிருக்ஷ குமார சுட்டிக்காட்டினார்.
இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது மட்டுமன்றி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கருத்துகளைப் பரப்புவதற்கு மேடையமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரணி அமைப்பாளர்கள் மீதும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் சட்டமும் அமைதியும் பேணப்படும் நிலையில், இத்தகைய சட்டவிரோதப் பிரசாரங்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி உடனடி விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முறைப்பாட்டுக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு (TID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேணியின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) ஊக்குவிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ அமைந்திருந்ததாகக் குற்றம் சாட்டி, சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) முறைப்பாடு அளித்துள்ளதை பொலிஸார் உறுதிபடுத்தியிருந்தனர்.

