வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பில் சர்வதேச மாநாட்டை நடத்தி, இலங்கையில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக வீதிகளில் முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு அப்பால், சர்வதேச அளவில் தங்களது கோரிக்கைகளை எடுத்துச் செல்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த மாநாடு அமைந்ததாக தெரிவித்தனர்.
மாநாடு ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதுடன், சர்வதேச பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இறுதிக்கட்டப் போர் காலத்திலும் அதற்கு முன்னரும், பின்னரும் தங்களது உறவுகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் அல்லது கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, தங்களது போராட்டங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும் போராட்டத்தை கைவிடவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த ஆண்டு தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் மேலும் வலுவாக முன்வைக்கும் நோக்கில் “நீதிக்கான நீள்பயணம்” என்ற சர்வதேச மாநாட்டை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நீதி கோரிக்கைகள் குறித்து அறிந்துகொண்டதாகவும், தங்களது நீண்டகால போராட்டத்திற்கு இந்த மாநாடு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநாட்டுக்கு ஆதரவளித்த தமிழ் மக்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்தும் தங்களது நீதி கோரிய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவும் தார்மீக உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

