இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2026 மே 28 அன்று இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளபோதிலும் கடன் நிலைபேறுதன்மை குறித்த ஆபத்து அதிகமாகவே உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், 2027ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதித் துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அரசாங்கத்தின் உள்மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் போதிலும், 2027 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் வேலைத்திட்டத்திற்குச் செல்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது, நாடு அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் சுமையைக் குறைக்கவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450

