இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி…
Source: https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452

