முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி மூன்றுமாதங்களில் விடுவிக்கப்படுமென பொலிசாரால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபோதும்,
இதுவரை குறித்த காணி விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த தனியார் காணி எப்போது விடுவிக்கப்படுமென போலிசாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள குறித்த தனியார்காணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்படுமென பொலிசாரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினரால் இதுதொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏற்கனவே கடந்த 03.06.2026அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத காலஅவகாசம் கோரியிருந்தனர்.
இருப்பினும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள குறித்த தனியார் காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இத்தகையசூழலில் இன்று இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிசாரிடம் கேள்வி எழுப்பினார்.
அந்தவகையில் குறித்த முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்படுமென பொலிசாரால் இதன்போது பதிலளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

