மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தீயணைப்பு படைப் பிரிவுகளை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,
அண்மையில் மன்னாரில் பனைத் தொகுதி தீப்பற்றியபோது, அதனை கட்டுப்படுத்த மன்னார் நகர சபையினர் முயற்சித்த போதிலும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த நீர் போதுமானதாக இல்லாததால் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வவுனியாவிலிருந்து மன்னார் சுமார் 19 கிலோமீற்றர் தொலைவிலும், வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளதால், தீயணைப்பு வாகனங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தனியான தீயணைப்பு படைப் பிரிவுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, மன்னார் மாவட்டத்தில் தற்போது தனியான தீயணைப்பு மத்திய நிலையம் இல்லாவிட்டாலும், மன்னார் நகர சபையிடம் நீர்த்தாங்கியுடன் கூடிய தீயணைப்பு வாகனம் ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி பிரிவுகளில் தீயணைப்பு வாகனங்களோ அல்லது தீயணைப்பு பிரிவுகளோ தற்போது இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்த பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்குள் மன்னார் தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவுகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அடுத்த நிதியாண்டில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் போதுமானளவில் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், வடக்கின் வசந்தம் எனக் கூறப்பட்ட காலத்திலும் தீ விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது காணப்படும் அடிப்படை குறைபாடுகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

