கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பேருந்துகளுக்கான முன்னுரிமைப் பாதை விதிமுறைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) முதல் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள ஏழு பிரதான பேருந்து முன்னுரிமைப் பாதைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மெட்ரோ பேருந்து அமைப்பின் தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
பயணிகள் பாதுகாப்பாகவும், தாமதமின்றியும் தங்களது இலக்குகளை சென்றடைவதுடன், வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மெட்ரோ அமைப்பினால் இயக்கப்படும் 104 ஆடம்பர பேருந்துகள் புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேருந்து முன்னுரிமைப் பாதைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயற்பாட்டில் இருக்கும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இந்த நேரங்களில் ஏனைய வாகனங்கள் முன்னுரிமைப் பாதைகளை பயன்படுத்துவதற்கும், அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை.
எனினும், அவசர நிலைமைகள், விபத்துகளைத் தவிர்ப்பது, கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது அல்லது பாதையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் ஏனைய வாகனங்கள் இந்தப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படும்.
மெட்ரோ பேருந்துகள் மட்டுமன்றி, அனைத்து பொதுப் போக்குவரத்து பேருந்துகளும் இந்த முன்னுரிமைப் பாதைகளைப் பயன்படுத்த முடியும்.
விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

