எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை 06 மாதங்களுக்கு தாமதப்படுத்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவை நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த அறிவிப்பானது, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (24) அனுப்பப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றம்
அதற்கமைய, பொலிஸ் அதிகாரிகளின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திகதி 2025, ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாயக் காரணங்களுக்காக 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இருந்தால், இது தொடர்பான அறிக்கையை மாகாண மட்டத்தில் உள்ள மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த DIGக்கள் தயாரித்து DIG மனிதவள மேலாண்மைக்கு அனுப்ப வேண்டும்.
கடமை தேவைகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபரின் இந்த முடிவால் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தமது தனிப்பட்ட தேவைகள் காரணமாக இடமாற்றங்களை எதிர்பார்த்திருந்த பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி, 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஜூன் 30, 2025 வரை இடமாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.