தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil wickramasinhe) வகுத்த பாதையில் செல்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,” பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்டது.
தேர்தல் பிரசார வாக்குறுதி
எனினும், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது.
தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன. அந்த வகையில், மின்சார விலை மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணிபுரிவதை தனது கட்சி ஆதரிக்கும் அதேவேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில், தமது கட்சி உறுதியாக உள்ளது.
இந்தநிலையில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இயலாமையை காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.