தேர்தல் மேடையில் அரசியல்வாதிகளின் செல்லப்பிராணிகளின் தரவைக் கூட அம்பலப்படுத்திய அரசாங்கத்திற்கு, தரவு பாதுகாப்பு பற்றிப் பேச தார்மீக உரிமை உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) நாடாளுமன்றத்தில்கேள்வியெழுப்பினார்.
இன்றையதினம் (03)நாடாளுமன்றில் இடம்பெற்ற தரவு பாதுகாப்பு சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
மிகவும் நல்ல விஷயம்
“தரவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது மிகவும் நல்ல விஷயம். இது சில ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, அது நடக்கவில்லை. இந்தத் துறைக்கு பணியாளர் ஆட்சேர்ப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி கூறுகிறார். இதற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தாமதமாகி வருவதால் டிஜிட்டல் பொறிமுறையை தாமதப்படுத்துவது நியாயமில்லை. அதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜேவிபி அரசாங்கம் இந்த சட்டத்தைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சட்டத்தை நாங்கள் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, நீங்கள் விமர்சன ரீதியாகப் பேசினீர்கள்.
மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை தரவு பாதுகாப்பு சட்டம் இன்றையதினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

