ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிய ஜனாதிபதி
அநுரகுமாரவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த சுமந்திரன், சமகால அரசியல்
விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக அறியமுடிந்தது.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பு
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 – 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட தேர்தல் வரைபு தொடர்பாகவும், இச்செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் முறை கேடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களை குறித்ததான சந்தேகத்தினையும் ஏற்படுத்துவதினை சுட்டிக்காட்டியிருந்ததோடு உடனடியாக அரசியல்வாதிகளின்
பெயர் பட்டியலினை வெளியிடுமாறும் கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
மேலும் தொடர்ச்சியாக இவ்விடயங்கள் தொடர்பாக தொடர்பாடுவதாகவும் வேண்டிய ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடையில் நேற்று முன் தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – பிரதீபன்