அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான
அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய
முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி
மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya), வைரவ புளியங்குளத்தில் இன்று (03.09) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தொவித்ததாவது, “அன்று கோட்டபாய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலிசப்ரி என்ற ஒருவரை
கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார்.
பிழையான வழிநடத்தல்
கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள்
அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலிசப்ரிக்கு கோட்டபாய வழங்கினார்.
அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு
திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.
அவர் முஸ்லிம் இளைஞர்களை பிழையாக வழிநடத்த முயல்கிறார். முஸ்லிம் தலைமைகளைப் பற்றி பேசுகிறார். நாம்
என்ன செய்தோம் என்று அந்த மௌலவி கேட்கின்றார்.
நாம் என்ன செய்தோம் என்பதை எமது மக்களிடம் கேட்டுப் பாருங்கள். பல அபிவிருத்திகளையும், மீள்குடியேற்றத்தையும்
செய்ததுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்கியுள்ளோம்.
எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையை
ஏற்படுத்தியுள்ளோம்.
சம்பள உயர்வு – பதவி உயர்வு
ஆகவே பொய்களை நம்பாதீர்கள்.
அதேபோல், ரணில் விக்ரமசிங்கவின் பணத்திற்காக சோரம் போய் விடாதீர்கள். இந்த மாவட்டத்தில் 4 வருடமாக இராஜாங்க அமைச்சராக இருப்பவர்
மக்களுக்கு ஒன்றுமே செய்யாது சோறு பார்சலும் கொடுத்து 2000 ரூபாய் காசும்
கொடுத்து மக்களை அழைத்து கொண்டு திரிகிறார்.தருவதை வாங்குங்கள். வாக்கை சஜித்
பிரேமதாசவிற்கு போடுங்கள்.
தபால் மூல வாக்களிக்கும் போது அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து
வாக்களியுங்கள். உங்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் எமது
ஆட்சியில் நடைபெறும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி சஜித் பிரேமதாசவிற்கு
வாக்களித்து இந்த நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் அணிதிரள்வோம்” எனத்
தெரிவித்துள்ளார்.