கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் வெளியிடப்பட்ட பெயர், அசாம் ஷெரிப்தீன் என்ற நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதகமாக மாறியுள்ளதாக கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முகமது அசாம் ஷெரிப்தீனின் என்பவரின் சகோதரர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர் தாசுன் பெரேரா, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயர் முகமது அசாம் ஷெரிப்தீன் அல்ல என்று கூறியுள்ளார்.
பொருத்தமான நடவடிக்கை
முகமது அசாம் ஷெரிப்தீனும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ஒருவர் அல்ல என்றும் இருவேறு நபர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, முகமது அசாம் ஷெரிப்தீனின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும், மேலும் இது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாததால், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.