மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesingh) திருப்திப்படுத்துவதற்காக பொருளாதாரம் தொடர்பில் சில அறிக்கைகளை வெளியிடுவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் கலாநிதி நலித ஜயதிஸ்ஸ (Nalida Jayatissa)இன்று(29) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் ஒரு கலாநிதி மற்றும் துறைசார் நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகள் விரும்பும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இருந்து நாடு விலகினால் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கலாநிதி வீரசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கலாநிதி ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நடைமுறை விஷயங்களைக் கூற வேண்டும்
“மத்திய வங்கி ஆளுநர், ஒரு கலாநிதி மற்றும் துறைசார் நிபுணர் என்ற வகையில், அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது. அவர் தனது பாட அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விஷயங்களைக் கூற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களிலும் இதேபோன்ற மத்திய வங்கி ஆளுநர்கள் இருந்ததாக கலாநிதி ஜயதிஸ்ஸ கூறினார். பொருளாதார திவால்நிலைமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தினால் ஆளுனர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.